யோக அறிவியல் :  

Posted by Cibi S

   யோகா என்னும் வார்த்தையின் நேரடிப் பொருள் " சங்கமித்தல்" அல்லது "இணைதல்" அல்லது "அனைத்தும் ஒன்றாதல்" என்பதாகும். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் உங்களில் ஒரு பாகமாக விளங்கும்போது நீங்கள் யோக நிலையில் உள்ளீர்கள் என்று பொருள். 

           சரி, ஆனால் எது எதனோடு இணைய வேண்டும் ?,எது எதனோடு சங்கமிக்க வேண்டும் ? "நாம்" என்று எதைக் கூறுகிறோமோ அதுவும், இந்தப் பிரபஞ்சமும் இணைவது, அல்லது நீங்கள் உங்களோடு இணைவது, அல்லது நீங்கள் இந்தப் படைப்பின் மூலத்தோடு இணைவது என்று இதற்கு எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். 


          எப்படி உங்கள் கையில் உள்ள ஐந்து விரல்கள் உங்கள் அனுபவத்தில் உங்களில் ஒரு பாகமாய் விளங்குகிறதோ, அதே போல இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உங்களில் ஒரு பாகமாக, அனுபவப்பூர்வமாக உணரவைப்பதே யோகாவின் குறிக்கோள்.
         சரி, ஆனால் அப்படி உணர்ந்து என்ன செய்வது ? உங்கள் கை விரல்களை எப்படிப் பாதுகாப்பது, எப்படி சுத்தம் செய்வது, எப்படி அதை இனிமையாக, எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக் கொள்வது என்று யாராவது சொல்லித்தர வேண்டுமா ? போதனை செய்ய வேண்டுமா ? தேவையில்லை, இல்லையா ? ஏனெனில் அது உங்கள் அனுபவத்தில் உங்களில் ஒரு பாகமாய் விளங்குகிறது. அதேபோல் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உங்களில் ஒரு பாகமாக உங்கள் அனுபவத்தில் உணர்ந்து விட்டால், "அவனைக் கொல்லாதே", "இது நல்லது", "இது இனிமையானது", "இது தீங்கைத் தரும்" என்று உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படித்தானே ? உலகமே இவ்வாறு இருந்து விட்டால், இந்த பூமியே வாழ்வதற்கு எவ்வளவு அற்புதமான இடமாய் மாறிவிடும் ? இதற்காகத்தான் யோகா.
         ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் எல்லை இல்லா ஆனந்தத்தை உணர, வாழ்கையை, அதன் தன்மையை அப்படியே உணர, அதன் போக்கை முழுதுமாய் அவன் கையில் எடுத்து, ஒரு அற்புதமான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து, அதன் மூலம், மனித உயிரை, அதன் தன்மையை எவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்வது தான் யோக அறிவியலின் அடிப்படை நோக்கம்.
        யோகா என்பது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல. நீங்கள் எப்போதுமே எதனோடாவது இணைந்தே இருக்கிறீர்கள், இல்லையா ? இந்த வானத்தோடு, இந்த பூமியோடு, காற்றோடு, இந்த உலகத்தோடு என்று எப்போதுமே எதனோடாவது நீங்கள் இணைந்தே இருக்கிறீர்கள். உங்களின் இந்த இணைதல் தற்செயலாக நடக்கிறதா அல்லது மிகுந்த விழிப்புணர்வோடு நடக்கிறதா என்பதுதான் கேள்வியே.
 இந்த இணைதல் தற்செயலாக நடந்ததால் நீங்கள் சாதாரண உயிராக இந்த பூமியில் தோன்றி மறைவீர்கள். இது விழிப்புணர்வோடு நடந்தால் உங்கள் வாழ்க்கை, உங்கள் உயிர்ப்பு நிலை, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகளைக் கடந்தாகி விடுகிறது.
 இவ்வாறு இந்த எல்லைகளைக் கடந்த, விழிப்புணர்வின் உச்ச நிலையை எட்ட யோகா உதவுகிறது. 
யோகாவின் முழு சாராம்சமே இதுதான். இது ஒரு தத்துவமல்ல. இது ஒரு உடற்பயிற்சி அல்ல. இது உங்கள் முழு அனுபவம். யோகா உங்களுக்குள் நிகழ்ந்தால் உங்கள் வாழ்வின் தன்மையே மாறிவிடும். மிகவும் அற்புதமாக, ஆனந்தமாக, துடிப்பாக, இளமையாக. இதனால் தான் யோகா ஒரு வாழ்க்கை முறை என்று பேசப்படுகிறது. 
        எனினும் யோகா என்பது ஒரு மருத்துவ முறை அல்ல. யோகாவின் நோக்கம் வேறாய் இருப்பினும், இதன் பின் விளைவுகள் நம் உடலுக்கு மற்றும் மனதுக்கு மருத்துவ ரீதியாய் குணமளிப்பதால் இதனை ஒரு மருத்துவ முறையாகக் கூட பார்க்கப் படுகிறது.
    உங்கள் வாழ்வின் பொருள்தன்மையைத் தாண்டிய ஒரு பரிமாணம் நிகழ வேண்டுமென்று நீங்கள் உண்மையாகவே விரும்பினால், நீங்கள் மனித வாழ்கையில், கனவில் கூட சாத்தியமாகாது என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்களை உங்கள் கண்முன், உங்கள் அனுபவத்தில் நிகழ வேண்டுமென்று ஆசைப்பட்டால், உங்கள் வாழ்க்கை ஆனந்தமாக, என்றென்றும் குதூகலமாக, என்றென்றும் கொண்டாட்டத்தோடு, நீங்காத இளமையோடு இருக்கவேண்டுமென்று நீங்கள் ஏங்கினால் வாருங்கள் !! என்னோடு சேர்ந்து யோகா கற்றுக்கொள்ளுங்கள் !! உங்களில் மலருங்கள் !!

துரதிர்ஷ்டவசமாக யோகா என்றாலே, ஆன்மிகம் என்றாலே காவி அணிந்து ருத்ராட்சம் அணிந்து காட்டுக்குச் செல்வது என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் அப்படியல்ல. யோகா என்பது நிச்சயம் இளமையானவர்களுக்கு.வாழ்க்கையை அனுபவிக்குத் துடிக்கும் உயிர்களுக்கு, வாழ்க்கையை அதன் உச்சத் தன்மையை அப்படியே உணர்வதற்கு யோகா துணைபுரிகிறது. யோகா மிகவும் கலர் புல்லானது. நீங்கள் இந்தப் பூமியில் வாழ்வதற்கு மிகவும் புத்திசாலித்தனமான அணுகுமறை யோகா !
          அதனால் நீங்கள் இன்னும் கலக்கலாக, இன்னும் துடிப்பாக, இன்னும் சந்தோஷத்தோடு இருக்க வேண்டுமானால் யோகா பயிலுங்கள் !!
இதுவரை உங்கள் மனதில் யோகாவைப் பற்றி நீங்களாக வைத்திருந்த அபிமானங்கள், சிந்தனைகள், mindsets, எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு, அதனை நேரடியாக அனுபவிப்பதற்குத் தயாராகுங்கள் !! 
யோக அறிவியல் 
          

This entry was posted on Saturday, January 8, 2011 at 9:30 AM . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment