இருளை விலக்க வந்தவரல்ல குரு. இருளை விளக்க வந்தவர் தான் குரு.குரு என்பது ஒரு வாய்ப்பு. அவர் திக்குத் தெரியாத காட்டிற்கு ஒரு வரைபடம் போல. குருவை உபயோகப் படுத்திக்கொள்ள நினைக்காமல் அவரோடு இருக்கப் பழகுங்கள். குருவும் ஆசிரியரும் ஒருவர் அல்ல. பள்ளிக்கூட வாத்தியார் மட்டுமே ஆசிரியர் அல்ல. உங்களுக்கு வாழ்கையை எப்படி வாழ்வது என்று கற்றுத்தரும் ஒவ்வொருவருமே ஆசிரியர் தான். ஆனால் குரு என்பவர் உங்கள் வாழ்வின் தன்மையையே உச்சத்திற்குக் கொண்டுசெல்லக் கூடிய ஒரு வாய்ப்பு. பிழைப்பைத் தேடும் விஷயங்களைத் தாண்டி, படைப்பின் மூலத்திற்கே நம்மைச் செலுத்தும் ஒரு உந்துகோல்.
ஆனால் தற்கால கல்வி முறை மேற்க்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் உள்நிலை நோக்கிய வளர்ச்சியைக் கண்டுகொலாமல் விட்டு விட்டது. அதனால் குருவின் தேவையும் அவசியமும் தற்கால மனித குலத்திற்கு இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் மனிதன் இதுநாள் வரை தன் பிழைப்பின் தரத்தைத் தான் உயர்த்திக்கொண்டிருக்கிறான். பிழைப்பைத் தாண்டி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.
பரவாயில்லை. இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியாவது அவன் தன் உச்சகட்ட சந்தோஷத்தை அடைந்து விட்டானா ?? இல்லை. அதுவும் இல்லை.அவன் பிழைப்பை முன்னேற்ற எது செய்தாலும் அது ஆனந்தமாய் இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால் சிறிது காலத்தில் அவனுக்கு நிறைவின்மை ஏற்பட்டு விடுகிறது. இது ஏன் இப்படி ?? ஏன் என்றால் அவனுடைய உண்மையான ஆனந்தம் பிழைப்பின் தரத்தை பிழைப்பின் தரத்தை உயர்த்துவதில் இல்லை. அவனுடைய உள்நிலை போதுமான வளர்ச்சி அடைந்துவிட்டால் அவன் நிறைவை எட்டி விடுவான். ஏனெனில் அவன் நிறைவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். நிறைவு தான் ஆனந்தம் தருவது. அதனால் ஆனந்தத்தை அடைய நிறைவை நோக்கி ஓடுகிறான். ஆனால் அவனுக்கு அவனுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் அனுபவமும் ஐம்புலன்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. ஐம்புலன்கள் அத்தனையும் போருல்தன்மைக்கு உட்பட்டே இயங்கி வருகின்றன. அவற்றால் அதைத் தாண்டி எதையும் உணர முடியாது. இதுதான் அவற்றின் இயல்பு. மனிதனுக்கு பிழைப்பு மட்டுமே வாழ்க்கையானால் ஐம்புலன்கள் போதும். அதுதான் நிறைவு. இந்த நிறைவில்தான் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்குக் கீழுள்ள அத்தனை ஜீவராசிகளும் வாழ்கின்றன. அவற்றிற்குப் பிழைப்பு தான் நிறைவு. அவை ஆனந்தமாகத்தான் இருக்கின்றன. வயிறு நிரம்பி விட்டால் அங்கே பிரச்சனை முடிந்தது. மனிதனுக்கும் அப்படி இருந்து விட்டால் பரவாயில்லை. அவனும் ஆனந்தமாகத்தான் இருப்பான். ஆனால் இங்கே வயிறு நிரம்பாவிட்டால் ஒரு பிரச்சனை. நிரம்பிவிட்டால் ஆயிரம் பிரச்சனை. அதற்குப் பிறகுதான் அவனுக்கு வாழ்கையே ஆரம்பிக்கிறது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதனுடைய வாழ்கையும் பிழைப்பைச் சுற்றியே நிகழ்ந்து வந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு உந்துதல் காரணமாக அவன் அந்த மிருகத் தன்மையிலிருந்து நாகரிகம் என்னும் ஒழுங்கு முறைக்கு வந்தான். அந்த ஏதோ ஒரு உந்துதல் தான் மனிதனை குரங்கிலிருந்து பரிணாமப் பட்டு தனி ஒரு புத்திசாலிதனமான உயிரினமாக வளரவிட்டது. அதுதான் இத்தனை வளர்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மூலகாரனமாகத் திகழ்கிறது. அதைத்தான் பொதுவாக ஆறாவது அறிவு என்று சொல்லுகிறோம். அதுதான் பிழைப்பையும் பொருள்தன்மையையும் தாண்டிய வாழ்க்கையைப் பற்றிய புரிதல். அந்தப் புரிதலின் உச்சத்தில் தான் அவனுடைய நிறைவு உள்ளது. அவன் இத்தனை ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும் நிறைவும் ஆனந்தமும் அந்த புரிதலின் உச்சத்தில் தான் உள்ளது. அங்கே தான் புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட படைப்பின் மேன்மையான விஷயங்களை உணர்தலை நோக்கி மனிதத் தன்மை நகர்கிறது. அவ்வாறு அது நகர்ந்து விட்டால் அது மனிதத் தன்மை என்னும் அடையாளத்தை விட்டு படைப்பின் மூலத்தோடு, அந்த எல்லை இல்லாத தன்மையோடு அது கலக்கிறது. இதற்குப் பெயர் தான் ஞானம். இந்த முழு வழிமுறைக்கும் போதிய தொழில்நுட்பம் ஏற்கனவே கண்டறியப்பட்டு, உணரப்பட்டு, வெற்றி காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் நடைமுறையில் ஒரு காலத்தில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. அந்தத் தொளில்நுட்பத்திற்குப் பெயர் தான் யோகா. அது ஒரு பாட முறையாக இல்லாமல், text books களாக வடிவமைக்கப் பாடாமல் ஒரு கலாச்சாரமாகவே, ஒரு பாரம்பரியமாகவே இந்த குரு சிஷ்ய முறை இருந்து வந்துள்ளது. அதனால் தான் ஒரு குரு இவ்வளவு மேன்மை பொருந்தியவர் என்று சொல்கிறோம். மனிதத் தன்மையிலிருந்து கடவுள் தன்மையை நோக்கி,. படைப்புத் தன்மையை நோக்கி நம்மை அவர் அழைத்துச் செல்வதால் இந்தக் கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வமாகவே போற்றப் படுகிறார். நம் இலக்கு ஆனந்தம் இல்லை என்றால் பரவாயில்லை. விட்டு விடலாம். ஒன்றும் தேவை இல்லை. ஆனால் நம் உண்மையான இயல்பே ஆனந்தம் தான். ஆனந்தத்தை நோக்கி நகர்வதுதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அந்த ஆனந்தத்தை நோக்கித்தான். இது மறுக்கமுடியாத உண்மை. அந்த நீங்காத ஆனந்தம், the everlasting joy வேண்டுமென்றால் அதற்கு யோகா அவசியமாகிறது. யோகா அவசியமென்றால் அதற்கு ஒரு குருவும் தேவைப் படுகிறார்.